அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி - பாலகுமாரன்
டாக்டர் மெல்ல அணைத்துக் கொண்டு என்னை ஓரமாக நகர்த்திக் கொண்டு போனார். “எல்லாம் முடிந்துவிட்டது. இருந்தாலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்.
தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து உற்சாகமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள்.
“சாவித்ரி. ஜெனரல் ஆஸ்பத்திரி” நான் பதில் சொன்னேன்.
“எப்போ கூப்பிட்டாலும் வரேன்னு சொல்லியிருக்கா. எனக்கு ஏதாவது தேவையா இருந்தா நான் கூப்டுக்கலாமா” ஒரு பர்மிஷன் கேட்பது போல் என்னிடம் பேசினாள்.
சாவித்ரி என் வாசகி. தன் புருஷனோடும், குழந்தைகளோடும் என் வீட்டிற்கு வந்து அம்மாவை நமஸ்காரம் செய்து சகல உதவிகளும் செய்வதாகத் தெரிவித்தார்.
“இதுக்கு முன்னால ஒரு பொண்ணு வந்தாளே. உன் கையைப் பிடிச்சுண்டு ஓன்னு அழுதாளே. எதுக்கு அழுதா?”
“நிறைய மனவேதனைகள் சுத்தி இருக்கறவா எல்லாம் நிறைய தொந்தரவு பண்றாங்க” என்று நான் பதில் சொன்னேன்.
“ஜாக்கிரதையா பார்த்துக்கோடா. உன்னால என்ன முடியுமோ, அத்தனை உதவி செய். அவ அழறபோது எனக்கு வயறு கலங்கிடுத்து. வேற யாரோன்னு விட்டுடாம உன்னால என்ன முடியுமோ அத்தனையும் செய்” அம்மா கட்டளைபோல் சொன்னாள்.
அம்மா ஒரு வார்த்தை சொன்னாள். “பாலகுமாரன் எதையும் துறக்காத துறவி” என்று திடீரென்று சொன்னாள். வீடு வாய்விட்டுச் சிரித்தது.
“என்ன… என்ன அர்த்தம் அதுக்கு. சொல்லு எதையும் துறக்காத துறவின்னா அது என்ன?” என்று என் மகள் ஸ்ரீ கௌரி பிலுபிலுவென்று பிடித்துக்கொள்ள அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.
“அவன் துறவிதான். ஆனால் அவன் எதையும் துறக்க வேண்டிய அவசியமில்லை. அவனைச் சுற்றி எது நடந்தாலும் அவன் துறவியாகத்தான் இருப்பான்” என்று சொன்னாள்.
என் வீடு தொடர்ந்து அதைக் கேலி செய்தது.
நான் சதாசிவ பிரும்மேந்திராள் பற்றிய ஒரு மாத நாவலில் எழுதி இருந்தேன். பலமணிநேரம் ஒரு முறைக்கு, இரு முறை அந்த நாவலைப் படித்தாள்.
மடித்து வைத்துவிட்டு மறுபடியும் அதை எடுத்துப் படிப்பாள். மறுபடியும் மூடி வைத்துவிட்டு கண்மூடிக் கிடப்பாள். மறுபடியும் எடுத்துப் படிப்பாள்.
“எப்படியிருக்கு நாவல்” நான்தான் வலிய போய் கேட்டேன்.
“ரொம்ப நன்னாயிருக்கு. ரொம்ப நன்னாயிருக்கு. எத்தனை அற்புதமா எழுதற. எத்தனை பேருக்குச் சொல்லித் தர. உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு” என் கையை, நெற்றியை, மார்பை, தலையைத் தடவிக் கொடுத்தாள்.
இடது கையில் யார் தோளையாவது பிடித்துக்கொண்டு, வலது கையில் வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக்கொண்டு டைனிங் டேபிளிலிருந்து சோபாவுக்குப் போவாள். மரண நேரத்துக்கு முதல் நிமிடம் வரை நடமாடிக் கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டிருந்தாள். சிரித்துக் கொண்டிருந்தாள். புலம்பிக் கொண்டிருந்தாள். படுத்துக் கொண்டிருந்தாள். சட்டென்று ஐந்தே நிமிடத்தில் காணாமல் போனாள்.
நான் ஐந்து வருடம் முன்பு காசிக்கும், கயாவுக்கும் போய்விட்டு வந்ததை காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ ஜெயேந்திரரிடம் விவரித்தேன்.
“குஜராத்ல ஒரு கயா இருக்கு தெரியுமோ. பெற்ற தாயாருக்கு மட்டும் ஸ்ரார்த்தம் பண்ற ஒரு இடம் இருக்கு தெரியுமோ” என்று ஜெயேந்திரர் வினவினார். தெரியாது என்றேன்.
“அந்த ஸ்ரார்த்த மந்திரம் சிலது இருக்கு. உனக்குச் சொல்றேன்.” ஸ்ரீ ஜெயேந்திரர் என்னை அருகே அழைத்து எனக்கு மட்டும் கேட்கும்படி தமிழில் ஒரு விளக்கம் சொன்னார்.
“தாயே, என்னைக் கருவில் ஏற்றபோது நீ உடம்பு வேதனைப்பட்டிருப்பாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன். நான் கருவில் உருவாகி வளர்ந்தபோது நீ வாயில் எடுத்து உணவு செரிக்காமல் அவஸ்தைப்பட்டிருப்பாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
தாயே என்னை வளர்ப்பதற்காக நீ விரும்பிய விரும்பாத எல்லா உணவையும் என் பொருட்டு எடுத்துக் கொண்டாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
தாயே நான் வளர்ந்து வரும் நேரத்தில் உன்னால் சுமக்க முடியாமல் பெருமூச்சு விட்டு, இங்கும் அங்கும் அலைந்தாயே, அந்த வேதனைக்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நீ போகவேண்டிய இடங்களுக்குப் போகாமல், அப்படிப் போனால் எனக்குக் கடினம் என்று சொல்லி வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டு, என் மீதே கவனமாக இருந்தாயே, அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் வெளியே உருவெடுத்து வந்தபோது உன்னுடைய உதிரம் பெருக்கெடுத்து ஓடியிருக்குமே, அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன். வலியில் அலறி இருப்பாயே அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் வாயால் கடித்து உறிஞ்சும் போது உன் மார்புக் காம்புகள் வலித்திருக்குமே அதற்காக இந்த ஜல தர்ப்பணம் செய்கிறேன். என் அழுகுரல் கேட்டதும் ஓடோடி வந்து தூக்கினாயே அதற்காக உனக்கு ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் பிறந்த பிறகு எனக்கு பால் கொடுக்க வேண்டுமென்பதற்காக வேண்டாததை விலக்கி, வேண்டியதை மட்டும் உண்டாயே, அதற்காக நான் ஜல தர்ப்பணம் செய்கிறேன்.
நான் உன் மடியில் மல, மூத்திரம் செய்தேனே அந்த துர்வாசனை வேதனைகளைப் பொறுத்துக் கொண்டாயே, நான் இரவிலே அழுது மற்றவர்கள் ஏச நீ எழுந்து என்னைச் சமாதானப்படுத்தி, மற்றவர்கள் ஏச்சைப் பொறுத்துக் கொண்டாயே அதற்காக ஜல தர்ப்பணம் செய்கிறேன் என்று,
ஐம்பத்தைந்து விதமான அவஸ்தைகளை ஜெயேந்திரர் சொல்ல எனக்கு மனம் ஆடிப்போனது.
திருவான்மியூர் மகாதேவ தீர்த்தத்தில் கல் ஊன்றி, கை மறித்து, கட்டை விரல் வழியாக அவள் தாக சாந்திக்காக ஜலம் விடும்போது எனக்கு இந்த ஐம்பத்தைந்து அவஸ்தைகள்தான் ஞாபகம் வந்தன.
அம்மா என்பது உடம்பல்ல, அம்மா என்பது சுலோசனா அல்ல. அம்மா என்பது மோனஹன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தமிழ்ப் பண்டிதை மட்டுமல்ல. அம்மா என்பது இந்த உலகத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிற ஒரு உணர்ச்சி.
அம்மா என்பது உலகத்திலுள்ள எல்லாப் பெண்களிடமும் இருக்கிற ஒரு சக்தி. அம்மா என்பது மழை பொழிய காத்திருக்கும் குளிர் மேகம். அம்மா என்பது உலகைக் குளிர்வித்துக் கொண்டிருக்கிற தாவர சக்தி.
அம்மா என்பது உலகிலுள்ள அத்தனை உயிர்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற பூமியின் பலம்.
அம்மா, நாள் தவறாது என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாள் தவறாது, எங்களுடைய குடும்ப கூட்டுப் பிரார்த்தனையில் பாடிக் கொண்டிருந்தாள்.
எந்த அவஸ்தையுமில்லாமல் பூ உதிர்வதுபோல் என் சத்குருநாதன் யோகிராம்சுரத்குமார் அவர்களின் தாமரைப் பாதங்களில் சேர்ந்து கொண்டாள்.
குருவைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் அம்மாவின் ஞாபகமும், அம்மாவை நினைக்கும் பொழுதெல்லாம் குரு என்ற ஒரு உணர்வும் ஏற்படும்.
யார் என் முன் அழுதாலும், யார் வேதனைப்பட்டாலும், அவர்கள் கைகளைப் பற்றிக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறதோ, அப்பொழுது எனக்கருகே என் அம்மா நிச்சயம் இருக்கிறாள். ஆசீர்வாதம் செய்கிறாள்.